கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் - ஒரு லீட்டர் பாலின் விலை எவ்வளவு தெரியுமா...
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறமையால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண வீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்பு, நாட்டின் நிலை மையை மேலும் சிக்கலாக்கியது.
எரிபொருள் தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறையாலும் பாகிஸ்தான் திண்டாடி வருகிறது. ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சமீபத்தில் அரசு வழங்கிய இலவச கோதுமையை வாங்க திரண்ட மக்களிடம் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் சில்லரை விற்பனையில் ஒரு லீட்டர் பால் விலை ரூ.190 இருந்து ரூ.210 ஆக உயர்ந்து உள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை

பால் விலை உயர்வு தொடர்பாக கராச்சி பால் விற்பனையாளர்கள் சங்கம் தரப்பில் கூறும்போது, 1000-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் அதிக விலைக்கு பாலை விற்பனை செய்கிறார்கள்.
எங்கள் சங்க உறுப்பினர்கள், பால் விலையை உயர்த்தவில்லை என தெரிவித்துள்ளது.
அதே போன்று மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக கடன் மேலாண் திட்டம் ஒன்றை பாகிஸ்தான் அனுப்பியது. அதை ஆய்வு செய்து சர்வதேச நாணய நிதியம் அத்திட்டத்தை நிராகரித்து விட்டது.
கடன் பெறுவதற்கான முயற்சி தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தானில் அத்தியாசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு செல்கிறது.
இந்த விலை உயர்வால் பாகிஸ்தான் மக்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.