நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
தற்போது நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான ஒப்பந்தம் இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்துடன் (CPC) எட்டப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, இந்தத் திட்டம் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் நெடுந்தீவு மக்களுக்கு கொழும்பில் உள்ள அதே விலையில் எரிபொருள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். தற்போது, தீவின் மின்சார உற்பத்தி ஜெனரேட்டருக்கு எரிபொருள் கொண்டு செல்ல ஏறத்தாழ ஏழு மணி நேரம் ஆகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மற்றும் மத ஒற்றுமை
புதிய எரிபொருள் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் எரிபொருள் பம்ப் செய்யும் திறன் இதற்கிருக்கும். இத்திட்டம் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் எனவும், முதல் கட்டத்திற்காக பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் ரூ. 50 மில்லியன் முதலீடு செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முன்னேற்றம், தேசிய மற்றும் மத ஒற்றுமைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தின் புதிய யுகத்தை குறிக்கிறது என்று அமைச்சர் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய அரசாங்கம் நாகதீவத்திலிருந்து அம்மன் கோவில்வரை மக்கள் ஒரே படகில் இணைந்து பயணிக்கும் சமத்துவமான காலத்தை உருவாக்கியுள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இனவெறியை நீக்கி தூய்மையான ஆட்சியை நிலைநாட்டும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
