ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் (Johnston Fernando) அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத் தடை
சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் டிசம்பர் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு
அத்துடன் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்ய காவல்துறையிர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாக இருந்ததால் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடந்த திங்கட்கிழமை (05) காலை முன்னிலையாகியதையடுத்து அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |