புலம்பெயர் ஈழத் தமிழருக்கு சுவிட்ஸர்லாந்தில் கிடைத்த அரசியல் சாசனம்!
சுவிட்ஸர்லாந்து செங்காளன் நாடாளுமன்றத்தின் முதல்வராக ஈழத் தமிழர் துரைராஜா ஜெயக்குமார் பதவியேற்றுள்ளார்.
இந்நிகழ்வு சுவிட்ஸர்லாந்து செங்காளன் நகரில் நேற்று முன்தினம் (20-01-2026) இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், சுவிட்ஸர்லாந்து செங்காளன் நாடாளுமன்றத்தின் முதல்வராக சமூகநலச் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அரசியல் பதவி
செங்காளன் நகரின் உயர்ந்த அரசியல் பதவியான நகரமன்றத் தலைவர் பதவிக்கு, பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா, ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இராமகிருஷ்ண மிஷனிலும், உயர் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

38 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து சுவிட்ஸர்லாந்திற்கு அகதியாகப் புலம்பெயர்ந்த இவர், 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்றார்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கட்சி சார்பில் நகரமன்ற உறுப்பினராகச் செயற்பட்டு வரும் இவருக்கு தற்போது 56 வயதாகும் நிலையில், இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
செங்காளன் நகர மக்களில் சுமார் 30 வீதம் பேர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள் என்பதால், அவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜெயக்குமார், இனப் பாகுபாடு மற்றும் சமூகப் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வருகிறார்.
ஒருகாலத்தில் அகதியாகச் சென்ற அவர், இன்று அதே மண்ணில் ஒரு நாடாளுமன்றத்தின் முதல்வராக உயர்ந்துள்ளதை ஒரு சவாலாகப் பார்ப்பதுடன், தனது வாழ்க்கையை ஒருபோதும் தாயகம் திரும்பிச் செல்ல முடியாத அகதிகளுக்காகவே அர்ப்பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |