சுற்றுலாத்துறை சார்பாக அதிபர் ரணில் பிறப்பித்த உத்தரவு
அம்பாறை, அறுகம்பை சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய அதிபர், பிரபலமான நீர் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை அறுகம்பை கடற்பிரதேசத்தில், ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கான இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறையில் பணியாற்றுவோர் கலந்துகொண்டனர்.
2035 ஆம் ஆண்டளவில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டப்படும் என சர்வதேச அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்ட அதிபர், சிறிலங்காவில் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும்,
சுற்றுலாத் துறையின் வருமானத்தின் ஊடாக சிறிலங்காவின் நிதிப் பிரச்சினைகளுக்கு நேரடித் தீர்வு பெற முடியும் என்றும் அதிபர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், அடுத்த 10 வருடங்களுக்குள் அதனை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தி தொகுப்பில் காண்க.