சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : நீதியமைச்சரின் கேள்வி
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் சட்டபூர்வமான தன்மை கேள்விக்குறியாக உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“சபாநாயகர் அரசியல் சட்டத்தை மீறி ஒன்லைன் பாதுகாப்பு மசோதாவை இயற்றியதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மசோதாவை நிறைவேற்றுவது சபாநாயகர் அல்ல. அதை நாடாளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் செய்கிறார்கள். நாடாளுமன்ற விவாதங்களில் கூட சபாநாயகர் பங்கேற்க அனுமதி இல்லை. மேலும் உச்ச நீதிமன்றங்கள் எந்த மசோதாவையும் திருத்தும்படி வற்புறுத்துவதில்லை. ஒரு மசோதா அரசியலமைப்பின் எந்தப் பிரிவையும் மீறுகிறதா இல்லையா என்பதை மட்டுமே பார்க்கிறது.
அரசியலமைப்பை மீறினாரா சபாநாயகர்
இவ்வாறான நிலையில் சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாக எவ்வாறு குற்றம் சுமத்த முடியும். எனவே சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையின் சட்டபூர்வமான தன்மை கேள்விக்குறியாக உள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.
“நம்பிக்கையில்லாப் பிரேரணையின் சட்டபூர்வமானதன் அடிப்படையில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் தங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்வார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
புதிய காவல்துறை மா அதிபர் நியமனம்
அரசியலமைப்பு சபையினால் புதிய காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள கூற்றையும் அமைச்சர் ராஜபக்ச கண்டித்துள்ளார்.
“காவல்துறை மா அதிபரின் நியமனம் குறித்து முடிவெடுப்பதற்கான அரசியலமைப்பு சபையின் வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றால், இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெரும்பாலான சட்டமூலங்களும் சட்டவிரோதமானதாக மாறும்.
“வரலாறு முழுவதும் வாக்களிக்கும் நேரத்தில் இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் பெரும்பாலான மசோதாக்கள் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டவை. சில சமயங்களில் சிலர் வாக்களிக்கவில்லை. கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் சட்டவிரோதமானது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவா “ என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
அரசியலமைப்புச் சபையின் நான்கு உறுப்பினர்கள் தென்னகோனுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்ததாகவும், இரு உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
"அரசியலமைப்பு சபையில் பெரும்பான்மையானவர்கள் காவல்துறை மா அதிபரின் நியமனத்திற்கு தெளிவாக ஒப்புதல் அளித்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |