குடும்பத்தகராறு இளம்குடும்பஸ்தரின் உயிரைப் பறித்தது
மட்டக்களப்பு காத்தான்குடியில் குடும்பத்தகராறினால் ஏற்பட்ட கைகலப்பில் கடுமையாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை(02) மாலை உயிரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி 2 கப்பல் ஆலிம் வீதியில் வசித்து வந்த முகம்மது முஸ்பீர்(வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என தெரிய வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டில் குடும்பத்தகராறு இடம் பெற்றுள்ளது. மனைவிக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் மனைவியின் சகோதரனுக்கும் (மச்சினன்) இடையில் தகராறு இடம்பெற்று மச்சினன் இவரை தாக்கியதாகவும் இதனால் காயமடைந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை(02) மாலை உயிரழந்துள்ளார் என தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பாக இவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் இவரின் மனைவியின் சகோதரனை (மச்சினன்) காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
உயிரிழந்த நபர் போதை வஸ்து பாவனைக்கு அடிமையானவர் எனவும் இதனாலேயே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.