அடித்து கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு - பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் இருந்தே இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மரப்பாலம் - முள்ளிச்சேனையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நேசராசா (Krishnapillai Nesarasa) (வயது-56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபரும் அவருடைய நண்பனும் சம்பவதினமான நேற்று இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும் யானை பயத்தினால் அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்ததாக தெரிவித்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவினர் மற்றும் மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணையினை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
மேலும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.