சுற்றுலா பயணியிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட குடும்பஸ்தர் : நீதிமன்றம் அளித்த உத்தரவு
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரைஎதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார்.
பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியான நெதர்லாந்து பெண் ஒருவரை கடந்த மாதம் 26ம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் இடைமறித்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அறுகம்பை சுற்றுலா காவல் நிலையத்தில் முறைப்பாடு
இது தொடர்பாக குறித்த பெண் அறுகம்பை சுற்றுலா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததையடுத்து குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக காவல்துறையினர் வெளியிட்டு அவர் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து குறித்த நபர் தொடர்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) விசாரணையை மேற்கொண்ட திருக்கோவில் காவல்துறையினர் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொகலந்தலாவையைச் சேர்ந்தவர் எனவும் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த சில வருடமாக திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
மொட்டையடித்து உருவத்தை மாற்றிய சந்தேகநபர்
இதனையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை முற்றுகையிட்ட போது அவர் அங்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெளியேறி களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றபோது அவர் அங்கிருந்தும் தலைமறைவாகிய நிலையில் மருதமுனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் தனது தலையை மொட்டையடித்து தோற்றத்தை மாற்றிக் கொண்ட நிலையில் இருந்தபோது அங்கு வைத்து குறித்த நபரை கைது செய்து பொத்துவில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை இன்று திங்கட்கிழமை (17) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்