இரண்டு மாதத்தில் ஏற்படப்போகிறது பஞ்சம் - கடும் எச்சரிக்கை விடுப்பு
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் பஞ்சம் ஏற்படும் எனவும், அரசாங்கத்தினால் டொலர்களை வழங்க முடியாவிட்டால் மின்சாரம் மற்றும் எரிபொருளில் கூட வெட்டுக்கள் ஏற்படும் எனவும் முன்னாள் அமைச்சரும் சஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க(Campikka raṇavakka) தெரிவித்துள்ளார்.
காலியில் நடந்த நிகழ்வொன்னின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரக் கப்பலுக்குப் பின்னால் ஒரு அரசு அதிகாரியின் உறவினர் இருக்கிறார். சீனாவில் இருந்து கரிம உரமாக இறக்குமதி செய்யப்பட்ட உரக்கப்பல் நாட்டுக்கு மிகவும் பாதகமானது என்பதை இந்நாட்டு ஆய்வுகூடங்கள் நிரூபித்திருந்த போதிலும் மீண்டும் வலுக்கட்டாயமாக அந்த உரக்கப்பலை இறக்க வருகின்றனர்.
இந்த மோசடிக்காரர்களின் விளையாட்டு வெள்ளைப் பூண்டிலிருந்து சீனி ஊசி வரை இயங்கும் மோசடி கொள்கையாகும். குப்பை மற்றும் மலம் ஆகியவற்றில் இருந்து இந்த உரம் செய்யப்படுகிறது. இதற்கு எதிராக முழு நாடும் கிளர்ந்தெழ வேண்டும்.
இந்த கப்பல் உரத்தை இறக்குமதி செய்ய முனையும் ஒப்பந்ததாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இப்போது இந்த நாடகம் போதும். தொற்றுநோய் நாட்டிற்கு உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்யும் மோசடியாக மாற்றப்பட்டது.
எமது நாட்டின் பயிர் மண்ணை அழிக்கும் உர இறக்குமதிக்கு எதிராக இந்நாட்டு மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். கரிம உரத் திட்டம் என்று அழைக்கப்படுவதால் விவசாயம் வீழ்ச்சியடைந்துள்ளது. தவறான உணவு கொள்கை மற்றும் மோசடி கொள்கை இதற்கு பங்களித்துள்ளது என அவர் தெரிவித்தள்ளார்.