தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகிய பெண் வைத்தியர் தொடர்பிலான வழக்கு விசாரணையின்போது பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் தந்தை கண்ணீருடன் உணர்ச்சிப்பூர்வமான வாக்குமூலம் அளித்துள்ளார்.
என் வாழ்வில் எல்லா நேரங்களிலும் தன் மகளை நான் பாதுகாத்திருக்கிறேன். ஆனால் இந்தச் சம்பவத்தில், என்னால் அவளைப் பாதுகாக்க முடியவில்லை என மிகவும் உருக்கமான வாக்குமூலத்தை வழங்கியுள்ளாார்.
தனது மகள் முன்பு பணியாற்றிய திருகோணமலை மற்றும் குளியாபிட்டிய மருத்துவமனைகளில் அவருக்கு முறையான பாதுகாப்பு இருந்ததாகவும், ஆனால் அனுராதபுரம் மருத்துவமனையில் அவர் தங்கியிருந்த விடுதியில் அத்தகைய பாதுகாப்பு எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்றொரு குற்றத்திற்காக கைது
மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த அக்கறையும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டிய அவர் , துயரச் சம்பவத்திற்குப் பிறகு தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டபோது, விடுதியைச் சுற்றியுள்ள மரக்கிளைகளை வெட்டி, அப்பகுதியை ஒளிரச் செய்ய மின்விளக்குகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்கவின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான முன்னாள் இராணுவ அதிகாரி தொடர்பான மற்றொரு முக்கியமான விடயமும் வெளியாகியுள்ளது.
அரசுத் தரப்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தணி ஹிமாலி ஜயநெத்தி, பெண் மருத்துவர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் மேல் நீதிமன்றத்தால் கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் செல்ல அனுமதிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு குற்றத்திற்காக கல்நேவ காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிணை குறித்த நிபந்தனை
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, மேலும் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ வீரரின் பிணையை இரத்து செய்து, அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட அரச சட்ட ஆலோசகரின் வழிகாட்டுதலின் பேரில், இவ்வழக்கில் 4-வது சாட்சியாகப் பெயரிடப்பட்டவரும், அனுராதபுர போதனா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
வழக்கின் மேலதிக விசாரணையை இமாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |