அஸ்வெசும கொடுப்பனவிற்காக புதிய வங்கி கணக்குகளை திறக்கும் பணி ஆரம்பம்
அஸ்வெசும நலன்புரி நன்மைகளை வழங்குவதற்காக வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைக் கோரும் காலப்பகுதி நவம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று (17) முதல் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தகவல்களைப் புதுப்பித்ததன் பின்னர் வெளியாகியுள்ள புதிய தகுதியான பயனாளிகளின் பெயர்ப் பட்டியலில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச வங்கிக் கணக்கு
அதற்கமைய, குறித்த பயனாளிகள் பின்பற்றப்பட வேண்டிய பிரதான நடவடிக்கைகளாக, புதிய அஸ்வெசும பயனாளிகளுக்குப் பலன்களை வழங்குவதற்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு நன்மைகள் கணக்கினைத் திறக்க வேண்டும்.

கணக்குகளை ஆரம்பிப்பதற்கான பரிந்துரை கடிதங்களை விநியோகிக்கும் பணிகள் 2026.11.17 ஆம் திகதி முதல் தமக்குரிய பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவினால் மேற்கொள்ளப்படும்.
வங்கிக் கணக்கு அரச வங்கி ஒன்றின் கணக்காக இருக்க வேண்டும். வங்கிக் கணக்கைத் திறந்ததன் பின்னர் பயனாளிகள் மீண்டும் தமக்குரிய பிரதேச செயலகத்திற்கு வந்து சமூகப் பாதுகாப்புத் தகவல் ஆவணத்தில் கணக்குத் தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும்.
நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்துப் பயனாளிகளும் தமக்குரிய வேறு வங்கிக் கணக்குத் தகவல்களைப் பரிசோதிப்பதற்கான தமது விருப்பத்தைச் சத்தியக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
பரிசோதித்துப் பார்த்தல்
நலன்புரி நன்மைகள் சபையாலோ அல்லது குறித்த பிரதேச செயலகத்தினாலோ அவசியம் ஏற்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயனாளிகளின் வங்கிக் கணக்குத் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் ஒருங்கிணைந்து பரிசோதித்துப் பார்ப்பதற்கு இந்தச் சத்தியக் கடிதம் மூலம் பயனாளி தனது விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்.

குறித்த சத்தியக் கடிதத்தின் மாதிரி வடிவத்தைப் பிரதேச செயலகத்தின் நலன்புரிப் நன்மைகள் தகவல் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே செயலில் உள்ள அஸ்வெசும வங்கிக் கணக்கு இருக்கும் பயனாளிகள் புதிய கணக்குகளைத் திறக்க வேண்டியதில்லை.
இதேவேளை புதிய பயனாளிகளுக்கும் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கும் நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவை 2026.11.27 ஆம் திகதி வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |