வட கிழக்கு நிரந்தர குடியமர்வுக்கு காணி விடுவிப்பு தடை - பத்மநாதன் சத்தியலிங்கம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் நிரந்தர குடியமர்வுக்கு காணி விடுவிப்பு தடையாக இருப்பது தீர்க்கப்பட வேண்டியதொரு பிரச்சினையாகும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணி விடுவிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி பிரச்சினை மக்களின் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.
காணி விடுவிப்பு தடை
யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகாலம் நிறைவடைந்துள்ள பின்னணியிலும் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வனவளத்துறை திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தால் பொதுமக்களின் காணிகள் சுற்றறிக்கைகள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மக்களின் விவசாய காணிகளும் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் விடுவிக்காமல் இருப்பது தொடர்ந்து நிலையான குடியமர்த்தலுக்கு தடையாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணி அபிவிருத்திச் சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட காணிகள் கூட மக்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் நிரந்தர குடியமர்வுக்கு காணி விடுவிப்பு தடையாக இருப்பது தீர்க்கப்பட வேண்டியதொரு பிரச்சினையாகும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |