அச்சம் மிகுந்த சூழலில் தமிழர்கள்! பேரிடர்களை சந்திக்கலாம் - சிறீதரன் எம்.பி
அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக - அடையாளம் அற்ற மனிதர்களாக அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மிக முக்கியமாக இன்றைய காலகட்டம் என்பது எல்லோருக்குமே ஒரு அச்சம் மிகுந்த சூழ்நிலையை தந்திருக்கிறது. இன்று என்ன நடக்கிறது - நாளை, நாளை மறுதினம் என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
இந்த வேளையில் நான் இளைஞர்களை கோருவது இம் மண்ணிலே நாம் தமிழ் தேசிய இனமாக எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழ வேண்டும். நாங்கள் இன்னும் எத்தனையோ இடர்களை சந்திக்கப்போகின்றோம்.
சிங்கள பௌத்த அரசுகளால் சூழப்பட்டுள்ள இந்த நிலை மிகப் பெரிய கேள்விகளை எங்கள் முன்னால் வைத்திருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சோரம் போகாதவர்களாக நாம் வாழவேண்டும் என்றார்.