வீதியில் செல்ல முடியாத நிலை - ஆளும் தரப்பு எம்.பிக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்
இலங்கையில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால் தாம் வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆளும் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மக்கள் எதிர்நோக்கும் இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைந்து தீர்வை முன்வைக்கவேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொது மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு நிலையான தீர்வை அரசாங்கம் விரைவாக முன்வைக்க வேண்டும்.அரசாங்கத்தின் சரியான தீர்மானங்களை வரவேற்று,தவறான தீர்மானங்களை விமர்சிக்கும் கொள்கையுடன் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.
எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அரசாங்கம் சிறந்த தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் விரைந்து செயற்படாவிடின் மக்கள் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்களா என்பது சந்தேகமாகும்.
எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத அவல நிலைமை அரசியல்வாதிகளுக்கு தோற்றம் பெற்றுள்ளது என மேலும் தெரிவித்தார்.
