“அரசாங்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சியில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள்”
தவறுகள் முரண்பாடுகள் இருப்பின் அவற்றை அமைச்சரவையில் பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து வெளியில் கூறுவது மிக மோசமான அரசியல் நாகரீகம் என சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தை குழப்பும் நபர்கள் வெளியேறினால் எம்மாலும் தூய்மையான அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியும். அரசாங்கத்தில் சில தவறுகள் இடம்பெறுவது குறித்தும் நாமும் முரண்படுகின்றோம்.
ஆனால் அவற்றை உடனடியாக திருத்திக்கொள்ள அரசாங்கத்தில் உள்ள மேல் இடத்திற்கு முறையாக கொண்டு சேர்க்கின்றோம். மாறாக வெளிப்படையாக விமர்சித்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த நாம் முயற்சிக்கவில்லை.
ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தில் பேசவேண்டிய விடயங்களை வெளியில் பிரசித்திப்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சியை முன்னெடுத்து வருகின்றனர். அமைச்சரவையில் பூனைகள் போன்று அமர்ந்துகொள்ளும் ஒரு சிலர் வெளியில் சிங்கங்கள் போன்று கர்ச்சித்துக்கொண்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.