ஸ்பெயின்-அர்ஜென்டினா உலகக் கோப்பை இறுதிப் போட்டி மோதல் குறித்து FIFA விசாரணை
அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு வெடித்த கைகலப்பு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.
ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பான போட்டி அறிக்கைகளை மதிப்பீடு செய்ததைத் தொடர்ந்து, ஃபிஃபா ஒழுங்குமுறை விதிகளின் (FDC) 36வது பிரிவுக்கு இணங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
போட்டிக்குப் பிந்தைய சம்பவங்கள் தொடர்பாக FDC-யின் விதி மீறல்களை விசாரிக்க, ஃபிஃபா ஒழுங்குமுறைக் குழு சட்டத்தரணி நியமித்துள்ளது என்று ஃபிஃபா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாக்குவது போல காட்சிகள்
ஆட்டத்தின் முடிவில், அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயினின் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்து தரையில் தள்ளியது போலவும், நஹுயேல் மோலினா ரோட்ரியைத் தாக்கியது போலவும் காணப்பட்டது.

அர்ஜென்டினாவின் உதவிப் பயிற்சியாளர் ராபர்டோ அயலாவும், டானி ஓல்மோவைத் தாக்குவது போல காட்சிகள் வெளியாகியிருந்தன.
இறுதி விசில் ஒலித்த பிறகு, நடுவர் ஸ்லாவ்கோ வின்சிச், பரேடெஸுக்கு சிவப்பு அட்டை காட்டியதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினாவின் நடத்தையையும் ஃபிஃபா ஆராய்ந்து வருகிறது. அப்போது, வீரர்கள் “லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்” (மால்வினாஸ் அர்ஜென்டினாவினுடையது) என்று பிரகடனப்படுத்தும் பதாகையுடன் கொண்டாடினர்.
ஃபாக்லாந்து தீவு
இது பிரித்தானியாவில் நிர்வகிக்கப்படும் தெற்கு அட்லாண்டிக் தீவுக்கூட்டமான ஃபாக்லாந்து தீவுகளுக்கு அர்ஜென்டினா பயன்படுத்தும் ஸ்பானியப் பெயராகும்.

அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, ஆதரவாளர்களால் அட்லாண்டா மைதானத்திற்குள் கொண்டுவரப்பட்ட பதாகையை லிசாண்ட்ரோ மார்டினெஸும் ஜியோவானி லோ செல்சோவும் ஏந்தி நின்றனர்.
இந்த செயல்பாடு பிரித்தானிய அதிகாரிகளிடமிருந்து விமர்சனத்தைத் தூண்டியது. அதிகாரப்பூர்வ போட்டிகளின் போது அரசியல் செய்திகளைத் தடைசெய்யும் விதிகளை வீரர்கள் மீறினார்களா என்பதை விசாரிக்குமாறு அவர்கள் FIFA-வைக் கேட்டுக்கொண்டனர்.
வீரர்களும் அணிகளும் அரசியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவிப்பதை ஃபிஃபா தடை செய்துள்ளது. இதன் காரணமாக, விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக அபராதங்களோ அல்லது தற்காலிகத் தடைகளோ விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்