குருந்தூர் மலையில் தமிழர்களின் இறுதிப் பூசை இதுவே - குருந்தூர் மலை விகாராதிபதி அதட்டல் பேச்சு
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற பொங்கல் வழிபாடே தமிழர்களின் இறுதி பூசையாக இருக்க வேண்டும் என குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த குருந்தூர் மலையை ஒருபோதும் தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தீர்மானம் தவறே
" முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் இதனை நாம் தவறான தீர்மானமாகவே கருதுகிறோம். சம்பிரதாய ரீதியான இந்து மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள்.
வடக்கு மாணத்தில் சிங்கள மக்கள் வாழ்வதை விரும்பாத தரப்பினர் விகாரையின் கட்டுமானப்பணிகளை எதிர்த்தனர். இவ்வாறான இனவாதத்தை தூண்டும் தரப்பினரே இன்று பொங்கல் வழிபாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் நாம் இதற்கு இடையூறு விளைவிக்காதிருந்தோம். எனினும், இங்கு நடைபெறும் இறுதி பூசையாக அல்லது நிகழ்வாக இது இருக்க வேண்டும்.
குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புக்களையும் சவாலுக்குட்படுத்தி நாம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளோம். இந்த பிரச்சனையை மேன்முறையீட்டு நீதிமன்றில் தீர்த்துக் கொள்ள நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.
இந்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.
இது இலங்கையின் சொத்து. இதன் உண்மையான உரிமையாளர்கள் பௌத்தர்களே. இவற்றை பாதுகாக்கவும் இதன் பயனை பெற்றுக் கொள்ளவும் அனைவருக்கும் உரிமையுண்டு. எனினும், இது பௌத்தர்களுக்கானது.அந்த உரிமையை எவராலும் பறிக்க முடியாது." என்று மேலும் அவர் தெரிவித்தார்.
மாதந்தோறும் பொங்கல் வழிபாடு
முல்லைத்தீவுடி குருந்தூர் மலையில் மாதந்தோறும் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
எனவே அனைத்து மக்களையும் இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.