சிறிலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி : விசாரணைகள் தீவிரம்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையத்தளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் பல இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் அண்மையில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் விடயங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு
பாதிக்கப்பட்ட இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், பமுணுகம பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 55 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கடவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 3.5 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இவ்வாறான போலி இணையத்தளம் மூலம் திருடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான், இந்தத் திட்டமிட்ட குற்றச்செயல் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலாக தகவல்களை உடனுக்குடன் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |