2027ஆம் ஆண்டு 6ஆம் தர பாடத்திட்ட மாற்றம்! தீர்மானித்தது அரசாங்கம்
பாடசாலை மாணவர்களின் நிதியியல் அறிவு மற்றும் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் தரப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் கல்வி மற்றும் நிதியியல் கல்வியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இளைஞர் தலைமுறையினரை நிதி மோசடிகளில் இருந்து பாதுகாப்பதுடன், பொறுப்பான நிதி முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான அறிவை வழங்குவதும் இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, செவ்வாய்க்கிழமை (10) இசுறுபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
25 மாவட்டங்களிலும் தலா ஒரு மையம்
மேலும், 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரை மூன்று கட்டங்களாக நாடளாவிய ரீதியில் 100 வர்த்தகக் கற்றல் மையங்களை அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 25 மாவட்டங்களிலும் தலா ஒரு மையம் வீதம் 25 மையங்கள் நிறுவப்படவுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கு நடைமுறை அனுபவங்கள் ஊடாக வர்த்தகக் கல்வியை வழங்குவதுடன், சமூகப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொழில்முனைவோர் தலைமுறையை உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
கல்வி அமைச்சின் தகவலின்படி, இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அத்தியாவசியமான நிதியியல் அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பொருளாதார நடவடிக்கைகளில் அதிகளவான மக்களின் பங்களிப்பை ஊக்குவித்து தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |