பலரின் உயிரை காவு வாங்கிய ரம்பேவ பேருந்து விபத்துக்கான காரணம் வெளியாகியது
அநுராதபுரம் - மதவாச்சி வீதியின் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்துக்கு, பேருந்தொன்று மற்றுமொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்றமையே காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று (10.11.2026) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 61 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்
அநுராதபுரம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவதாகவும், உயிரிழந்தவர்களில் 47 வயதுடைய பேருந்து சாரதியும் ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பலருக்கு கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மூன்று பேருந்துகளிலும் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளும் அதிக வேகத்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின்போது பேருந்தொன்றின் டீசல் குழாய் உடைந்து இயந்திரக் கோளாறும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |