காரணத்தை கண்டறியுங்கள் -கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு
உள்நாட்டு பால்மா நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய(Gotabaya) பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, மிரிஹான பிரதேசத்தில் பால்மா விற்பனை நிலையத்திற்கு காவல்துறையினர் சோதனை செய்து சீல் வைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகள் ஆதாரமற்றவை என ஸ்ரீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா அரச தலைவரின்பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த கடையில் பால் மா விநியோகம் செய்வதற்கு ஒரு யன்னலை மாத்திரம் பயன்படுத்தியதால் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உரிய நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விற்பனையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இன்று முதல் பொதுமக்களுக்கு பால் மாவை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்க பெல்வத்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சட்டவிரோதமாக வந்து பால் மா விற்பனை நிலையங்களுக்கு சீல் வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பால் மா நிறுவனத்தின் தலைவருடன் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நேற்று கலந்துரையாடியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அரச தலைவரின் பணிப்புரைக்கமைய காவல்துறையின் தலையீட்டில் மிரிஹான பகுதியில் கலைக்கப்பட்ட, பால் மாவிற்காக ஒன்று கூடிய மக்களின் வரிசை இன்று மீண்டும் ஒன்று திரண்டது. சட்டரீதியாக மக்களின் வரிசையை கலைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மக்களின் தேவை பூர்த்தியடையாமையினால் மிரிஹான உள்நாட்டு பால் மா விற்பனை நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி கைகூடவில்லை.
பின்னர் பால்மா உற்பத்தி நிறுவனத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள் காவல்துறையின் தலையீட்டுடன் கலைக்கப்பட்டனர்.
டோக்கன் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய காவல்துறையினர், இன்று டோக்கனை பெற்றுக்கொண்டு, அடுத்த நாள் பால் மாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிவித்துள்ளனர்.
எனினும், மக்கள் மீண்டும் பால் மாவை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.