இந்தோனேசியாவை உலுக்கிய தீ விபத்து: 24 பலி - தொடரும் மீட்பு பணிகள்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் செராங் (Serang) மாவட்டத்திலுள்ள சிகாண்டே (Cikande) பகுதியில் அமைந்துள்ள இனிப்புப் பண்டத் தொழிற்சாலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ள கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் காணாமல் போயுள்ள மேலும் 30 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பகட்ட அறிக்கைகள்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யுனைடெட் ஃபேமிலி ஃபுட் (United Family Food) நிறுவனத்திற்குச் சொந்தமான பி.டி. ஃபோனுசா அகுங் முலியா (PT Fonusa Agung Mulia) தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குளிரூட்டியில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது பணி நேரத்தில் சுமார் 300 பேர் தொழிற்சாலையில் இருந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதுவரை 24 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தீயின் தீவிரத்தினால் சடலங்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமிருந்து மரபணு (DNA) மாதிரிகளைச் சேகரிக்கும் பணியைப் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

இந்நடவடிக்கைக்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தீ விபத்து ஏற்பட்டு 12 மணித்தியாலங்களுக்கு மேலாக 15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர்த்தாரை வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |