வெளிநாடொன்றில் இரு பாடசாலைகளில் தீ விபத்து: 26 மாணவர்கள் பலி
கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள புகாவு நகரில் அருகருகே அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு கிவு மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களில் 19 சிறுமிகளும் 7 சிறுவர்களும் அடங்குவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
M23 கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள புகாவு நகரில், முதற்கட்ட தகவலின்படி 24 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு கிவு மாகாண அரசாங்கம்
உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, முதலில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள வீடொன்றில் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் தீ அருகிலிருந்த Furaha உயர்நிலைப் பாடசாலை மற்றும் Ujamaa ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றுக்கும் பரவியுள்ளது.

Furaha பாடசாலைக்குள் பல மாணவர்கள் சிக்கிக்கொண்டதாகவும், சிலர் புகை மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயிலிருந்து தப்பிக்க மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது, வெளியேறும் வாயில் குறுகியதாக இருந்ததால் சில மாணவர்கள் ஜன்னல்கள் வழியாக குதித்ததாகவும், மற்றவர்கள் கதவை நோக்கி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் கீழே விழுந்து மிதிபட்டதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வயதுகளைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாடசாலை சீருடையுடன் அருகிலுள்ள சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்களை துல்லியமாக கணக்கிடுவதில் மருத்துவப் பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
எனினும், தீ ஆரம்பித்த பகுதி அதிக மக்கள் தொகை கொண்டதாகவும், அங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |