ஆர்ப்பாட்டப் பேரணி மீது துப்பாக்கிச் சூடு!! ஐவர் பலி - லெபனானில் பெருந்துயர்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐவர் பலியாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற துறைமுக குண்டுவெடிப்பு தொடர்பிலான நீதிபதி விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிபதி தாரீக் ஃபித்தரை நீக்குமாறு ஹிஸ்புல்லா இயக்கத்தின் ஆதரவாளர்களும் அரசியல் கட்சியான அமல் இயக்கத்தினரும் கோரிவரும் நிலையில் தலைநகர் பெய்ரூட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது கடுமையான துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டைமோதலுக்குள் இழுத்துச் செல்லும் வகையில் கூரைகளுக்கு மேல் இருந்து ஸ்னைய்ப்பர் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
துறைமுக குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையானது லெபனானில் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. நியாயமற்ற முறையில் முன்னாள் அரசாங்க அமைச்சர்களுடன் கூட்டிணைந்து செயற்படுவதாக ஹிஸ்புல்லா இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் நீதித் திணைக்களத்திற்கு வெளியே நீதிபதி ஃபித்தருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்ததுடன், அதன் பின்னர் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் பாரிய கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தயோனே-பதரோ என்ற பகுதி ஊடாக ஆர்ப்பாட்டகாரர்கள் பேரணியாக சென்ற போது கடுமையான துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த லெபனான் இராணுவத்தினர் தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டு, துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பகுதியை நோக்கி பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் துப்பாக்கி சூட்டுத் தாக்குதல் எங்கிருந்து மேற்கொள்ளப்பட்டது என்பதை அறியாத மக்கள், சிதறி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா இயக்கமும் அமல் இயக்கமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், நாட்டை யுத்தமொன்றிற்குள் இழுத்துச் செல்லும் வகையில் ஆயுதம் தாங்கிய ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
தீங்கான அரசியல் இலாபங்களை அடைந்துகொள்ளும் நோக்குடன் துறைமுக குண்டுவெடிப்பின் பின்னால் இருப்பவர்கள் இந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.