24 பேரின் உயிரை காவு வாங்கிய கொத்மலை பேருந்து விபத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
நுவரெலியா ஊடாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தானது கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை நினைவுகூறும் முகமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தியும், காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக சுகப்பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
விபத்து நடைபெற்ற இடத்திலேயே இந்த சர்வமத நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
கொத்மலை பகுதி
கொத்மலை பகுதியைச் சேர்ந்த மகா சங்கத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பீரித் பாராயணம் நடத்தி, விபத்தில் உயிரிழந்த 24 பேருக்காக ஆத்ம சாந்தி செய்ததுடன், பிரார்த்தனையும் நடைபெற்றது.

இதனுடன், ஏனைய மதத் தலைவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு தத்தமது மத மரபுகளின்படி பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாத நிகழ்வுகளை நடத்தினர்.
2025 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி அதிகாலை சுமார் 4.30 மணியளவில், கதிர்காமத்திலிருந்து நுவரெலியா ஊடாக குருணாகல் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், சாரதி உட்பட 24 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 40 பேர் படுகாயமடைந்து நுவரெலியா, கம்பளை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த விபத்துக்கான காரணமாக சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமை கண்டறியப்பட்டதாக விசாரணைக்காக நியமிக்கப்பட்ட விசேட காவல்துறை குழு தெரிவித்திருந்தது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த பெண்ணொருவரின் சிசுவை காப்பாற்றி, தாய்ப்பால் வழங்கிய பிரதேச பெண்ணொருவருக்கு பாராட்டு பரிசு வழங்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |