மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு
ஈழத் தமிழ் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் வகையில், இலங்கையின் மட்டக்களப்பு மண்ணில் முதன்முறையாக உலகளாவிய ரீதியிலான திருக்குறள் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமாகவுள்ளதாக மாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத் துறைப் பேராசிரியர் வ. கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.
கல்லடி திருச்செந்தூர் ஆலய சந்நிதான மண்டபத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.
மனித வாழ்வின் உயரிய விழுமியங்களான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைக்கும் திருக்குறளை மையப்படுத்தி, "உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்" என்ற தொனிப்பொருளில் அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
திருக்குறள் ஆய்வு
மாநாட்டின் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பொன். பாலசுந்தரநாதன் (வேல்நம்பி) கலந்துகொள்ளவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அநிருத்தனன், அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ. தண்டாயுதபாணி மற்றும் தழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி த. கணேசரத்தினம் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், ஈழத் தமிழ் உலகில் புகழ்பெற்ற கம்பவாரதி ஜெயராஜ் கலந்து கொண்டு "ஒரு நூல்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.
திருக்குறள் ஆய்வுகளை வளப்படுத்தும் நோக்கில் மாநாடு இரண்டு ஆய்வரங்குகளாக நடத்தப்படவுள்ளதுடன், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களால் திருக்குறளை மையப்படுத்திய ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இலங்கையின் கிழக்கு, வடக்கு, மலையகம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக, இலங்கையில் முதன்முறையாக திருக்குறளுக்கான சுமார் 1,450 பக்கங்களைக் கொண்ட விரிவான உரைநூலை தனது சொந்த மொழிநடையில் உருவாக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள முனைவர் மனோன்மணி சிறப்பாக கௌரவிக்கப்படவுள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே திருக்குறள் குறித்த விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. வெற்றிபெறும் மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மட்டக்களப்பில் நடைபெறும் இம்மாநாடு, பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே திருக்குறளின் அறவாழ்வியல் சிந்தனைகளைப் பரப்புவதோடு, திருக்குறள் ஆய்வுகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என பேராசிரியர் வ. கனகசிங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்