யாழில் இடம்பெறவுள்ள முதலாவது சர்வதேச சைவ மாநாடு
யாழ்ப்பாணம் பிரணவம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “முதலாவது சர்வதேச சைவ மாநாடு - 2026” வருகின்ற ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்" என்ற உயரிய கோட்பாட்டை முன்வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு, வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் நகரில் அமையப்பெற்றுள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இம்மாநாடு "வாழ்வியலில் திருமுறைகள் – திருமுறைகளில் வாழ்வியல்" என்ற முதன்மைத் தலைப்பில் நாள் முழுதும் நடைபெறவுள்ளது.
சைவ சமயத் திருமுறைகள் மனிதனின் அன்றாட வாழ்வியலோடு எவ்வாறு ஒன்றிணைந்துள்ளன என்பதையும், சைவ நெறிமுறைகளின் வழி நின்ற வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் உலகறியச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும் என அறிவித்துள்ளனர்
இம்மாநாட்டில் சைவ சமய ஆதீனக் குருமார்கள், ஆன்மீகச் சான்றோர்கள், திருமுறைச் செல்வர்கள் மற்றும் சைவ சித்தாந்த வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அத்துடன் பல்வேறு ஆன்மீகச் சொற்பொழிவுகள், திருமுறை இசை நிகழ்வுகள் மற்றும் கருத்துரைகளும் இடம்பெறவுள்ளன.
தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..." எனும் இறை முழக்கத்தோடு நடைபெறும் இந்நிகழ்வில், உலகெங்கிலும் வாழும் சைவ அன்பர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு இறைஅருள் பெறமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |