அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்த விவகாரம்: போர் விளிம்பில் ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து
அமெரிக்காவுடன் ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய அதிகாரி ஒருவர் மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகமொன்று நேற்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
இரு தரப்பினரும், மத்தியஸ்தர்கள் ஊடாக முன்னைய உடன்பாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு குறித்து கலந்துரையாடி வருகின்றனர் எனவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம்
எனினும், இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.
எனினும், ஜூலை 7ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த ஏற்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குப் பின்னர், ஈரானும் குறித்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் ஈரான் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள ஈரான், குறிப்பாக ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை மீள வழங்குவது தொடர்பில் அமெரிக்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |