புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 2403/13 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, 10ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அங்கு, மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 எம்.பி.க்கள் மற்றும் தேசிய பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 29 எம்.பி.க்கள் உட்பட, நாடாளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அன்றைய தினம் பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவு, “முதல் நாளில், அவையின் முக்கியப் பொறுப்புகள், நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு ஒதுக்கப்படும்.
அத்துடன், எம்.பிக்களுக்கு இருக்கை ஒதுக்கபடாத நிலையில், எம்.பிக்கள், தாங்கள் விரும்பும் எந்த இருக்கையிலும் அமரலாம்.
அதி விசேட வர்த்தமானி
சபையில் செங்கோலை வைத்த பின்னர், நாடாளுமன்றக் கூட்டத்தின் திகதி மற்றும் நேரத்தை நிர்ணயித்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அன்றைய தினம் முதல் பணியாக சபைக்கு செயலாளர் நாயகம் சமர்ப்பிப்பார்.
பின்னர், அரசியலமைப்பின் உறுப்புரை 64 (1) மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 இன் விதிகளின்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்வார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், பிரதி சபாநாயகர் மற்றும் பிரதிக் குழுத் தலைவர் ஆகியோர் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.”என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |