இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம்: யாழ் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களால் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய துணைத் தூதரகம் முற்றுகை
அவர்களை விடுவிக்க வேண்டும் என கோரி தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் போராட்டம் நடாத்தப்படுகிறது. எங்கள் வயிற்றில் அடித்து வயிற்றுப் பிழைப்புக்காக வந்தோம் என இந்திய கடற்றொழிலாளர்கள் கூறுவது தவறு.
இந்திய அரசு கடல் எல்லையில் நின்று அத்துமீறுபவர்களை தடுத்தால் இந்த பிரச்சினை ஏற்படாது. தமிழ் நாடு கடற்றொழிலாளர்கள் அயல் மாநிலங்களுக்கு சென்றால் இந்திய சட்டத்தின் கீழ் கைது செய்படுவார்கள் என்ற அச்சத்தால் தொப்புள் கொடி உறவு என கூறி இங்கு அத்துமீறி வந்து தொழில் செய்கிறார்கள்.
சில நாட்களாக மயிலிட்டி பகுதியில் தொடர்ச்சியாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
போராட்டம் வெடிக்கும்
எங்களுடைய எல்லைக்குள் உள்நுழைவதை நாங்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டோம். யுத்தத்தால் பாதிக்கபட்ட எங்களுக்கு வாழ்வாதாரம் என்பது கடலை நம்பியே உள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த பயனுமில்லை, இனியும் இந்த ரோலர் படகுகளை நிறுத்தாவிட்டால் நாங்களே சென்று ரோலர் படகுகளை எரிக்க நேரிடும்.
எனவே இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எங்களது போராட்டம் வெடிக்கும்.
இறுதி முடிவு
அரசாங்கத்தை நாங்கள் நம்புவதற்கு தயாராக இல்லை காரணம் அவர்கள் எங்களையும் கைது செய்ய தயங்க மாட்டார்கள்.
எனவே இதற்கு ஒரு முடிவு இல்லாதபட்சத்தில் நாங்கள் எங்களது முற்றுகையை முன்னெடுப்போம்.
ஆகவே எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம் - என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |