இவ்வருடம் முழுவதும் சதொசவில் தேங்காய்க்கு நிர்ணய விலை!
லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பினூடாக இவ்வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிர்ணய விலையில் தேங்காய்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோருக்கு குறைந்த விலையில் தேங்காய்களை வழங்குவதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் என்பன வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டன.
இதன்படி, முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஒரே நேரத்தில் 5 தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் தேங்காயின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது, லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் விலைகளும் எதிர்காலத்தில் குறையும் என மேலும் தெரிவித்துள்ளார்.
