சரத்பொன்சேகாவின் காய் நகர்த்தல் - ஆரம்பமானது பிரசாரம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2024 ஆம் ஆண்டிற்கான பிரதமர் பதவிக்கான பிரசாரங்களை ஆரம்பித்திருக்கின்றார்.
எனினும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவம் மற்றும் அவரது செயற்பாடுகள் குறித்து அக்கட்சியின் தவிசாளராகிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வைத்திருந்த நம்பிக்கை சரிவடைய ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் தாக்குதல்களை மேற்கொண்டு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்குவர வழிவகுத்த முன்னாள் அரச தலைவரான மைத்திரிபால சிறிசேனவுடன் திரைக்குப் பின்னால் சஜித் பிரேமதாஸ இரகசிய பேச்சுக்களை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மே 19ஆம் திகதி நடைபெற்ற போர் வெற்றி விழாவை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சரத் பொன்சேகா உட்பட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சஜித் பிரேமதாஸவிடம் தெரிவித்திருந்தனர். எனினும் அந்தக் கோரிக்கைகளை புறக்கணித்த சஜித் பிரேமதாஸ தனியே சென்று அதில் பங்கேற்றிருந்தார் எனவும் கட்சித் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலையி்ல் சஜித் பிரேமதாஸ என்றாவது ஒருநாள் ஆட்சிக்கு வந்தால் பிரதமராக மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பார் என்ற சந்தேகத்தில் கட்சியிலுள்ள பலரும் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.
தொழிலதிபரும் அரசியல்வாதியும் அரச தலைவர் கோட்டாபயவுக்கு நெருக்கமானவருமான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் டிரான் அலஸுடன் சஜித் பிரேமதாஸ நெருக்கமான தொடர்பை பேணிவருவது தொடர்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலரும் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அரசியல் உறவாளர்கள், அவரது ஆலோசனை, அனுசரணை மற்றும் வழிகாட்டலின் கீழ் 'சரத் பொன்சேகாவை பிரதமராக்குவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.