பொன்சேகாவால் அரசுக்கு ஏற்பட்ட கலக்கம் -விழிப்பு நிலையில் படையினர்
பொன்சேகாவின் கருத்து தொடர்பில் படைத்தரப்பு அவதானம்
மக்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை கொழும்புக்கு கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விடுத்துள்ள தீவிர கருத்து தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் அவதானம் செலுத்தி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் இன்று 9வது (03) ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில், ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் இன்று (03) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரதூரமான கருத்து
சரத் பொன்சேகாவின் இந்தக் கூற்று பாரதூரமான கருத்து என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்படும் இவ்வாறான கருத்துக்கள் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த அறிக்கை தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார். மேலும், மே 9ஆம் திகதி ஏற்பட்ட கலவர சூழ்நிலையால் ஏற்பட்ட வீடு மற்றும் சொத்து சேதங்கள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.க்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம்
எம்.பி.க்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியவர்களை இதுவரையில் கைது செய்யாவிடின், அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அமைச்சர் திரான் அலஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளார்.