அரச மருத்துவமனைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் குற்றச்சாட்டு
நாட்டில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளர்களிற்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு காணப்படுவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளால் அரசாங்க மருத்துவமனைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இலவச உணவில் தங்கியிருப்பது போன்றவற்றின் காரணமாக அதிகரிக்கும் கஸ்டங்கள் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மருத்துவமனைகளில் அனுமதி பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அறவிடப்பட்டும் கட்டண அதிகரிப்பு காரணமாகவே அதிகளவு மக்கள் அரசமருத்துவமனைகளை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.
நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
இதன் காரணமாக அரசாங்க மருத்துவமனைகளில் வழங்கப்படவேண்டிய இலவச உணவின் அளவும் அதிகரித்துள்ளது. இது ஏற்கனவே பலவீனமாக உள்ள வளங்கள் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் நோயாளிகள் இலவச உணவை கேட்பது குறைவு அவர்களை வந்து பார்ப்பவர்களிடமிருந்து உணவு கிடைப்பதும் ஒரு காரணம் என தெரிவித்துள்ள முக்கியமான அரசாங்க மருத்துவமனையின் அதிகாரியொருவர் ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது பலர் தற்போது இலவச உணவை நம்பியுள்ளனர்.
மேலும் நோயாளிகளை பார்வையிட எவரும் வருவதும் இல்லை மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன, உணவுப்பொருட்களின் தரங்கள் குறைவடைகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவை விநியோகிப்பவர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவது குறித்து சிந்திப்பார்களா என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வளங்கள் பற்றாக்குறை
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் மருத்துவமனைகளில் வழங்கப்படும் உணவை நம்பியிருக்கும் நிலைமையும் சுகாதார சேவையை வழங்குபவர்களிற்கும் நோயாளிகளிற்கும் சவாலான நிலையை உருவாக்கியுள்ளது.
வளங்கள் பற்றாக்குறை தெளிவாக தென்படுவதுடன் உணவுப்பொருட்களின் ஊட்டச்சத்து குறித்து மாத்திரமல்லாமல் இலவச உணவு தேவையை அரசாங்க மருத்துவமனைகளால் தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியுமா என்ற கரிசனையும் எழுந்துள்ளது.
உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் உணவின் தரம் பாதிக்கப்படுகின்றது என கவலை வெளியிட்டுள்ள சுகாதார அதிகாரிகள் நோயாளர்களிற்கு வழங்கப்படும் உணவின் ஊட்டச்சத்து தரத்தினை இது பாதிக்கின்றது எனவும் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தற்போதைய உணவு விநியோகம் குறித்து மறு ஆய்வு செய்யவேண்டிய நிலையேற்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் இந்த சவால்கள் காரணமாக நோயாளர்களின் நலனை உறுதி செய்யக்கூடிய நிலையில் மருத்துவமனைகள் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |