கம்மன்பிலவின் வெளிநாட்டு பயணத்தடை: நீதிமன்றம் விடுத்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு(Udaya Gammanpila) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டது.
அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கிற்குச் சொந்தமான ரூ.20 மில்லியன் மதிப்புள்ள உள்ளூர் நிறுவனத்தில் பங்குகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் மார்ச் 24 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் மீது விதிக்கப்பட்ட பயணத் தடை இன்னும் நீக்கப்படவில்லை என்று உதய கம்மன்பில தனது சட்டத்தரணி மூலம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
அதன்படி, கம்மன்பிலவுக்காக முன்னிலையான சட்டத்தரணி இனோகா பெரேரா, தனது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன, உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        