முடிவிற்கு வரும் போராட்டம் : நேபாளத்தை ஆளப்போகும் முதல் பெண்மணி
புதிய இணைப்பு
வெள்ளிக்கிழமை (செப்.12) இரவு சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவியேற்றார். நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
புதிய பொதுத் தேர்தலை நடத்த முடிவு
பதவியேற்றதும் கார்கி தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 4 அன்று புதிய பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. பொதுத் தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவசரநிலையை நடைமுறைப்படுத்தவும் கார்கி பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி(Sushila Karki,) நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் நேபாளத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக அவர் இன்றிரவு பதவியேற்க உள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
முத்தரப்பு பேச்சை அடுத்து நியமனம்
ஜனாதிபதி பௌடெல், இராணுவத் தளபதி அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் நேபாளத்தின் மிக மோசமான எழுச்சிக்கு தலைமை தாங்கிய போராட்டக்காரர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி ராம்சந்திர பௌடெல் அலுவலகம் கார்க்கியின் நியமனத்தை அறிவித்தது.
73 வயதான கார்க்கி, உள்ளூர் நேரப்படி இன்று(12) இரவு 9:15 மணிக்கு பதவியேற்பார் என்று ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி அர்ச்சனா கட்கா தெரிவித்தார். அவருடன் மேலும் இரண்டு அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஒரே பெண்மணியான கார்கி, நேர்மை, மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கான அவரது நற்பெயரை மேற்கோள் காட்டி போராட்டக்காரர்களின் விருப்பமான தேர்வாக இருந்தார்.
2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சுமார் ஒரு வருடம் அவர் உயர் நீதித்துறையில் பதவி வகித்தார்.
சமூக வலைத்தள தடையால் வெடித்த போராட்டம்
26 சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பின்னர் போராட்டம் தீவிரமான நிலையில், நாடாளுமன்றம், அரச கட்டிடங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில் அந்த நாட்டு பிரதமராக செயற்பட்ட கே.பி சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியது. அதன் பின்னர் நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நேபாள இராணுவத்தினர் அதனை பொறுப்பேற்ற நிலையில், போராட்டங்கள் கைவிடப்பட்டு அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையிலேயே நேபாளத்திற்கு இடைக்கால பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
