மன்னார் காற்றாலை திட்ட எதிர்ப்பில் காய்நகர்த்தும் முன்னாள் அரசியல்வாதிகள்! இப்படி கூறும் சந்திரசேகர்
மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணயில் முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் - சங்கானையில் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த காற்றாலை தொடர்பான பிரச்சினைக்கு உரிய மக்களுடன் கலந்துரையாடி கூடிய விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம் எனவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.
முன்னாள் அரசியல்வாதிகள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “மன்னார் காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடாத்தியவர்கள், காற்றாலைகளுக்கு பின்னால் ஓடியவர்கள், அந்த காற்றாலை கம்பனிகளுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டவர்கள் முன்னைய அரசியல்வாதிகளே.
அந்த மோசடி அரசியல்வாதிகளே இந்த போராட்டத்தின் பின்னால் இருக்கின்றனர்.
நாங்கள் கூறுவது யாதெனில், இது மக்களது பிரச்சினையாக இருக்குமாக இருந்தால், இது மன்னாருடைய பிரச்சினையாக இருக்குமாக இருந்தால், இந்த பிரச்சினையால் மன்னார் மூழ்குமாக இருந்தால் அது பற்றி வேதனையடைபவர்கள் நாங்கள் தான். அதனை தடுத்து நிறுத்துபவர்கள் வேறு யாருமல்ல நாங்கள் தான்“ என தெரிவித்துள்ளார்.
தொடர் போராட்டங்கள்
மன்னாரில் காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த திட்டத்தை பல்வேறு காரணங்களை முன்னிறுத்தித் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில், காற்றாலை அமைப்பதற்கான பொருட்களை கொண்டு செல்ல போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியிருந்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
