நாற்காலியில் இருந்த பச்சிளம் குழந்தை! மாயமாகியுள்ள தாய், தந்தை
நிகவெரட்டிய, ஹுலோகெதர பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் இருந்து ஒரு மாத பெண் குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மஹாவ தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார ஊழியர் ஒருவரின் வீட்டின் முன் ஒரு நாற்காலியில் விடப்பட்டிருந்த பெண் குழந்தையை, நேற்று (02) காலை 6.00 மணியளவில் அங்கு இந்திராணி அனுலா என்பவர் அவதானித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் குறித்து அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் வந்து குழந்தையை நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், வைத்தியசாலையின் வைத்திய பரிசோதகர், பெண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தாய் குழந்தையை கைவிடுவதற்கு முன்பு குழந்தைக்கு பால் கொடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு பால் பவுடர் பைக்கற்று மற்றும் சில துணிகளும் பெண் குழந்தையின் அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கை
அத்தோடு, சம்பவ இடத்தில் கிடைத்த மருத்துவ அறிக்கைகளின்படி, குழந்தை ஒரு வைத்தியசாலையில் குழந்தை பிரிவில் சிகிச்சை பெற்றிருந்ததும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தாயார் மற்றும் வைத்தியசாலையின் பெயர்கள் படிக்க முடியாதபடி கீறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, குழந்தை விடப்பட்ட வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீதியின் அருகே குழந்தையின் தாயாருக்குச் சொந்தமானது என்று சந்தேகிக்கப்படும் சில துணிகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
