கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு சீன வர்த்தகர்கள் கைது
கட்டுநாயக்க விமானநியைத்தில் தரையிறங்கிய சீன வர்த்தகர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவர்.
ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் (10.8 மில்லியன்) பெறுமதியான, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தி வந்த நிலையிலேயே சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பசுமை வழி ஊடாக செல்ல முற்பட்டபோது கைது
இவர்கள் ஜூலை 01 அதிகாலை 12:30 மணியளவில், தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து 'தாய் ஏர்வேஸ்' (Thai Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான 'TG-307' என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நிலையத்தின் வருகை முனையத்தில், பிரகடனப்படுத்துவதற்கு எதுவுமில்லை என்ற 'பசுமை வழி' (Green Channel) ஊடாகச் சந்தேகத்திற்கு இடமின்றி வெளியேற அவர்கள் முயற்சித்தவேளை சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் இவர்களை மடக்கிப் பிடித்தனர்.
பயணப்பொதிக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள்
அவர்கள் கொண்டு வந்த ஆறு பயணப் பொதிகளுக்குள் (Bags), சீனாவில் தயாரிக்கப்பட்ட 72,000 சிகரெட்டுகள் (360 கார்ட்டூன்கள்) மறைத்து வைக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட குறித்த நால்வரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்