நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு கோரிக்கை
நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரியுள்ளனர்.
கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இது தொடர்பான கடிதம் தினேஷ் குணவர்த்தனவுக்கு நேற்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பிலான விவாதத்தை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென சுதந்திர மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வாக்குச் சீட்டு விநியோக பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் இதற்கு தேவையான நிதியை திறைசேரி வழங்காமையும் நாட்டின் ஜனநாயக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த விடயத்தில் பிரதமர் தலையிட்டு நாடாளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கோரியுள்ளது.
தேர்தல் தொடர்பான பிரச்சினைகள்

எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவிருந்தாலும், அது தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள தினங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கூட்டப்பட்டு தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென சுதந்திர மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.