இலங்கை அரசாங்கத்திடம் பிரான்ஸ் சட்டத்தரணிகள் சம்மேளனம் விடுத்த முக்கிய கோரிக்கை
இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனம் இதுதொடர்பில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.
அந்தத் தீர்மானத்தில், முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம், நீதித்துறையின் மீது தேவையற்ற மற்றும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பொதுமக்களால் பார்க்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதியின் மீதான மக்களின் நம்பிக்கை
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரான்ஸ் சட்டத்தரணிகள் சம்மேளனம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, நேர்மையான மற்றும் அதிகாரம் பெற்ற நீதித்துறை அமைப்பு அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்காமல் இருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பான எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் போதுமான அளவில் பெற்ற பின்னர், முறையான சட்ட நடைமுறைகளுக்கும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |