படுகொலை விவகாரம் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கடும் விசனம்
தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் கருத்துகளை தெரிவித்தவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (
S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) தலைமையக காவல் நிலையத்தில் குறித்த முறைப்பாடானது இன்று (19.10.2024) முன்னாள் இராஜாங்க அமைச்சரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், “கடந்த 17ஆம் திகதி மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான மற்றும் முற்றுமுழுதான பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
வாக்குமூலங்கள்
எனது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கொலை தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, எனது அனைத்து தகவல்களும் பெறப்பட்டன.
எனது கையடக்க தொலைபேசி மற்றும் மெய்க்காலவலர் என அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
சம்பவம் நடைபெற்றபோது நான் இருந்த இடம் தொடர்பிலான அனைத்து தகவல்களும் காவல்துறையினரிடம் வழங்கப்பட்டன.
ஆனால் இவையெல்லாம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.
முகப்புத்தகம் ஊடாக நேரலை
அதேபோன்று கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் என்பவர் முகப்புத்தகம் ஊடாக நேரலை செய்து எனது பெயருக்கும் எனது முற்போக்கு கழகத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.
முன்பு ஒரு தடவை இவ்வாறு கருத்துகளை தெரிவித்த அவருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்த போது தான் இனி அவ்வாறு செயற்படமாட்டேன் என எங்களிடம் வந்து தெரிவித்ததையடுத்து அந்த வழக்கினை திரும்ப பெற்றேன்.
ஆனால் அவர் மீண்டும் எனது பெயருக்கும் முற்போக்கு தமிழர் கழகத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தகாத வார்த்தைகள் மூலமாகவும் முகப்புத்தகத்தில் நேரலை செய்துள்ளார்.
இன்று காவல்துறை தலைமையகத்தில் அவருக்கு எதிராகவும் முறைப்பாட்டினை செய்துள்ளேன்“ என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |