மக்களுக்கு நத்தார், புதுவருட பரிசாக அரசாங்கம் வழங்கியது என்ன?
தேசிய சொத்துக்களை நாசமாக்குவதிலும், விற்பனை செய்வதிலும் நல்ல அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் கொண்ட ஒரு குழுவே இன்று ஸ்ரீலங்காவில் ஆட்சி நடத்துவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் எரிபொருள் விலையை அதிகரித்து நத்தார் பரிசை வழங்கிய நிலையில், பால்மா விலையை அதிகரித்து புதுவருட பரிசையும் வழங்கியுள்ளதாக அவர் தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சொத்துக்களை விற்பனை செய்யவோ, வீணாக்குவதற்கோ நாம் வரவில்லை. அவ்வாறான நிபுணத்துவமும், அனுபவமும் உள்ள வேறு குழு ஒன்று காணப்படுகின்றது. அவர்களே இன்று இந்த நாட்டை ஆட்சி செய்கின்றனர். எனினும் எங்களால் இந்த நாட்டை மீட்கும் இயலுமை உள்ளது. அந்த பலம் எம்மிடம் காணப்படுகின்றது. எங்களது வேலைத்திட்டங்கள் ஊடாக அதனை நாம் நிரூபித்திருக்கின்றோம். விசேட பண்டிகைக் கால பரிசுகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கவுள்ளன.
எரிபொருட்கள் விலைகளை அதிகரித்து மிகப்பெரிய நத்தார் பரிசு ஒன்றை அரசாங்கம் வழங்கியது. இதன் ஊடாக மக்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டது. வருமான இழப்பு ஏற்பட்டது. நத்தாருக்கு வழங்கிய பரிசுடன் இணைந்ததாக, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரித்து மீண்டும் ஒரு பரிசை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதுவே இந்த நாட்டு பிள்ளைகளுக்கு, தாய்மாருக்கு அரசாங்கம் வழங்கிய பரிசு.
இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு மக்களின் கஷடம், துக்கம், வேதனை புரியாது. மக்கள் இவ்வாறு கஷ்டப்படுகையில் பெரும்பாலானவர்கள் இந்த நாட்டில் இல்லை. அவர்கள் பூமியில் கால் வைக்காததால், அவர்கள் வானத்தில் பறப்பதால் இந்த மக்களின் துயர் புரியப்போவது இல்லை.
இந்த நாட்டு மக்கள் கஷ்டத்திலும், வறுமையிலும் வாடுகின்ற நிலையில் நாட்டின் ஆட்சியாளர்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.