இடைநிறுத்தப்படவுள்ள 40 எரிபொருள் நிலையங்கள் - அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான கியூஆர் ஒதுக்கீடுகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அதிகாரிகளுடன் இன்று காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் ஸ்டாக் டேங்க் கொள்ளளவில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை பராமரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜிபிஎஸ் கண்காணிப்பு

ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து எரிபொருள் தங்கிகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும் என்றும், அதன்பிறகு அனைத்து தனியார் தங்கிகளுக்கும் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.