எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கு நாடுகளை நாடும் சிறிலங்கா அரசு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் பிரச்சினைகளால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதை காண முடிகிறது.
அதேவேளை, எரிபொருள் சிக்கல்களால் நேற்று 50 சதவீத பேருந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் கடந்த மூன்று நாட்களாக இலங்கை டிப்போ முன் தனியார் பேருந்துகள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்துகள் இன்று முதல் இடைநிறுத்தம்
டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பேருந்துகள் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக டிப்போ முகாமையாளர் டி. அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் சில நாட்களுக்கு இந்நிலை நீடித்தால் பேருந்து சேவைகள் தடைப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கு எரிபொருளை கொண்டு வருவதற்கு கட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

