கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்: விசாரணை நடத்த முக்கிய கோரிக்கை
கொவிட்-19 காலப்பகுதியில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை கடிதம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிய பிரேரணையை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரி 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து குறித்த கோரிக்கை கடிதத்தை கையளித்த்துள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கை
அப்போதைய அரசாங்கத்தின் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறியும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முரணாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறித்த தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் இந்த மனித உரிமை மீறல் மற்றும் அநீதி தொடர்பில் முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |