தமிழரசுக் கட்சியுடன் ஒன்றிணைய தயார் - கஜேந்திரகுமார் எம்.பி. அறிவிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கி வரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த் தேசிய தரப்புகளுடன் பேச்சுகளை முன்னெடுத்திருந்தது.
அதன் பிரகாரம் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரை காத்திரமான முறையில் கையாள வேண்டியது அவசியம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் ஊடாகவே அடுத்த கட்டமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒத்த நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.
பதவி சார்ந்தவை அல்ல
எனவே, அதை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடனும் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பேச்சுகள் பதவி சார்ந்தவை அல்ல என்பதால் தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழரசுக் கட்சியும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு எதிர்வரும் 11 ஆம் திகதி தமது கட்சியின் மத்திய குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருப்பதாகவும் அதன்போது மேற்குறிப்பிட்ட பேச்சுகளுக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
