நிதியமைச்சக அதிகாரி மரணம்! காவல்துறையினருக்கு கம்மன்பில வழங்கிய பதில்
நிதியமைச்சின் அதிகாரி ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டதாக தான் கூறிய கருத்தை காவல்துறையினர் மறுத்தமைக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பதிலளித்துள்ளார்.
தனது கூற்று வெறும் ஊகம் அல்ல என்றும், அது முறையான ஆவண ஆதாரங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக, ரங்க ராஜபக்சவின் பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்காக குழுவொன்றை நியமித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 2026 மே 1-ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தை கம்மன்பில சுட்டிக்காட்டியுளளார்.
வாக்குமூலம் வழங்க தயார்
ஏப்ரல் 30-ஆம் திகதி நிகழ்ந்த தனது கணவரின் மரணம் சந்தேகத்திற்குரியது என ரங்க ராஜபக்சவின் மனைவி அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாக அந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சாதாரணமாக இத்தகைய தகவல்கள் காவல்துறையினருக்கு அறிவிக்கப்படும் என்ற விபரத்தை மட்டுமே தான் மேலதிகமாகச் சேர்த்ததாக அவர் இதன்போது விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்வரும் மே 9-ஆம் திகதி குளியாப்பிட்டிய காவல்நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்கப் போவதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |