கணேமுல்ல சஞ்சீவ கொலை : துப்பாக்கிதாரியின் அடையாள அட்டை குறித்து வெளியான தகவல்
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியிடமிருந்து மீட்கப்பட்ட சட்டத்தரணிகள் சங்க அடையாள அட்டை போலியானது எனவும், அது தமது சங்கத்தினால் வழங்கப்பட்ட அட்டை அல்ல எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கடந்த புதன்கிழமை (19) கொழும்பு (Colombo) நீதிவான் நீதிமன்றின் 5ஆம் இலக்க அறையில், வழக்கு விசாரணையின் இடையே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்திய சந்தேக நபர் பாலாவியில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
இதன்போது, அவரிடமிருந்து சிங்களப்பெயரிலான இலங்கை சட்டத்தரணிகள் சங்க அடையாள அட்டையொன்றும் மீட்கப்பட்டது.
இதுகுறித்துத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை தமது சங்கத்தின் பிரதிநிதிகளால் பரிசீலிக்கப்பட்டதாகவும், சட்டத்தரணிகள் சங்கத்தின் தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில், அந்த அடையாள அட்டையில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் தமது சங்கத்தின் உறுப்பினர் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலித்தகவல்
அத்தோடு அந்த அடையாள அட்டையானது போலியான பதிவு இலக்கம், உயர்நீதிமன்ற இலக்கம் மற்றும் கியூ.ஆர் பதிவு என்பவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி அந்த அடையாள அட்டையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலாளரின் கையொப்பம் உரிய இடத்திலன்றி, பிறிதொரு இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், போலித்தகவல்களைப் பயன்படுத்தி அவ்வட்டை தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
